இரு தரப்பினர் மோதல் 26 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி, ; பெருவங்கூரில் பள்ளம் தோண்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் உட்பட 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி அய்யம்மாள், 54; ஊராட்சி தலைவர். இவரது ஏற்பாட்டில் குடிநீர் பைப் லைன் அமைப்பதற்காக தெருவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி அதே ஊரைச்சேர்ந்த செல்லம்மாள் என்பவர் இறந்துள்ளார். அப்போது, அதே ஊரைச்சேர்ந்த பழனிசாமி தரப்பினர் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பிரேதத்தை எப்படி எடுத்து செல்வது என கேட்டுள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக அய்யம்மாள் அளித்த புகாரின் பேரில், பழனிசாமி, ராமமூர்த்தி, மாயவேல், கொளஞ்சிவேல், ராஜீ உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதில் ராமமூர்த்தி ஊராட்சி துணைத்தலைவர். அதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த மணிக்கொடி அளித்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் அய்யம்மாள், பிரவீன், இளையராஜா, மணி, கோகுல் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இரு தரப்பை சேர்ந்த 26 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.