குப்பை தொட்டிக்கு சென்ற சி.சி.டி.வி., கேமரா
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு கடுவனுார் பஸ் நிறுத்தத்தில் போலீஸ் அமைத்து சி.சி.டி.வி., கேமரா, குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் வீடு புகுந்து திருட்டு, தம்பதியை கட்டிபோட்டு மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த 3ம் தேதி மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுாரில் முகமூடி கொள்ளையர்கள், கேசரிவர்மன் என்பவரின் வீட்டில் புகுந்து வயது முதிர்ந்த தம்பதியை கட்டிபோட்டு, 211 சவரன் தங்க நகையை திருடிச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.திருட்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிய, போலீஸ் சார்பில், கடுவனுார் பஸ் நிறுத்தில் போலீசார் சி.சி.டி.வி., கேமரா அமைத்து இருந்தனர். அப்பகுதி சாலை அமைக்கும் பணியின்போது, கேமரா கம்பத்தை பிடுங்கி குப்பை கொட்டும் இடம் அருகே ஓரமாக வைத்துவிட்டனர். சாலை பணி முடிந்த பின்பும் மீண்டும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தவில்லை. மீண்டும் கேமரா பொருத்தி இருந்தால், 211 சவரன் நகை கொள்ளையர்களை கண்டறிய உதவியாக இருந்திருக்கும். எனவே, குப்பை தொட்டியில் வீசப்பட்ட சி.சி.டி.வி., கேமராவை மீண்டும் அமைக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.