உளுந்துார்பேட்டை தொழிற்பேட்டையில் பணியில் சேர கலெக்டர் அழைப்பு
கள்ளக்குறிச்சி; உளுந்துார்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டை யில் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் பணியில் சேர்ந்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பேசினார்.உளுந்துார்பேட்டை ஆசனுார் சிட்கோவில் உள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்தை கலெக்டர் பிரசாந்த் திறந்து வைத்து பேசியதாவது:சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட உளுந்துார்பேட்டை ஆசனுார் சிட்கோ தொழிற்பேட்டையில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.இந்த தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மாநில முதலீட்டு மானியமாக, 4 நிறுவனங்களுக்கு 82.68 லட்சம் ரூபாய் மற்றும் மின் மானியமாக, 4 நிறுவனங்களுக்கு 6.01 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இந்த தொழிற்பேட்டை கடந்த 2007ம் ஆண்டு 212.83 ஏக்கர் நிலப்பரப்பில் துவங்கப்பட்டது. இதில் 152 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 75 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உளுந்துார்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டை யில் பணியில் சேர்ந்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், தொழில் நிறுவன உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.