/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணிமுக்தா அணையில் பழுதாகிய ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி... நிறைவு:முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மணிமுக்தா அணையில் பழுதாகிய ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி... நிறைவு:முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பழுதாகிய பழைய ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி முடிவடைந்ததால் நடப்பாண்டில் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை நீர், மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. இதுதவிர, மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, விவசாயத்திற்காக பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசன பகுதியில் உள்ள 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும்.
Galleryகனமழை பெய்யும் போது 3 பழைய ஷட்டர்கள் மற்றும் 4 புதிய ஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இதனால் ஆற்றில் உள்ள அணைக்கட்டுகள் நிரம்புவதுடன், அருகாமையில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைத்தால் சுற்று வட்டார 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் உயரும். குறிப்பாக, கோடைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதில், கடந்த 1968ம் ஆண்டு அமைக்கப்பட்ட 3 பழைய ஷட்டர்களும் துருப்பிடித்து வலுவிழந்த நிலையில் இருந்தது. ஷட்டர்களின் திறன் முற்றிலுமாக குறைந்ததால் அணையில் 30 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை நீடித்தது. இதையொட்டி, கடந்த 2025ம் ஆண்டு செப்., மாதம் பழைய ஷட்டர்கள் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக ரூ.20.76 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலை ஏற்பட்டதால் மொத்த கொள்ளளவான 36 அடியில், கடந்தாண்டு 25 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அணையில் இருந்த தண்ணீர் குறைந்ததும் ஷட்டர் புதுப்பிக்கும் பணி துவங்கியது. முதற்கட்டமாக பழைய ஷட்டர் பகுதியில் புதிதாக 'இன்ஸ்பெக் ஷன் பிரிட்ஜ்' அமைக்கப்பட்டது. இதையடுத்து, செயின் மூலம் இயக்கப்படும் வலுவிழந்த ஷட்டர்கள் அகற்றப்பட்டு, சேதமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டன. தொடர்ந்து, ஹைட்ராலிக் முறையில் இயங்கும் 3 ஷட்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டு, பெயிண்ட் அடிக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட ஷட்டர்களை மின்சாரம், ஜெனரேட்டர் மட்டுமின்றி மேனுவல் முறையிலும் பயன்படுத்தலாம். ஹைட்ராலிக் ஷட்டர்களை அதிகபட்சமாக 3 மீட்டர் வரை துாக்க முடியும். இதன் மூலம் அணையில் இருந்து விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றலாம். தொடர்ந்து, மோட்டார் உள்ள பகுதியிலும், இன்ஸ்பெக் ஷன் பிரிட்ஜிலும் வெளிநபர்கள் நுழையாதவாறு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டது. பாசன மதகு ஷட்டர்களும் புதுப்பிக்கப்பட்டது. ஷட்டர் புதுப்பிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதால் அணையின் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருப்பதுடன், தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.