உளுந்துார்பேட்டை பகுதியில் மழையால் உளுந்து பயிர்கள் பாதிப்பு: இழப்பீடு கிடைக்காததால் இன்சூரன்ஸ் செய்வதில் ஆர்வம் குறைவு
உளுந்துார்பேட்டை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பருவ காலத்திற்கு ஏற்ப பெய்ததால் முப்போகம் பயிரிட்டு விவசாயம் செய்து நல்ல லாபத்தை ஈட்டி தந்தது. தற்போது காலநிலை மாற்றத்ததால் அதிக மழை ,வறட்சி என ஏற்படுவதால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், விவசாய தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு மாறி வரும் போக்கு அதிகரித்துள்ளது. விளைச்சல் குறைந்ததால் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்துவருகின்றனர். இருப்பினும் விவசாயத்தையே நம்பியுள்ள விவசாயிகள் சிலர் நிலங்களை விற்பனை செய்ய மனமில்லாமல் பயிர்செய்து வருகின்றனர். தற்போது உளுந்துார்பேட்டை பகுதியில் கடந்த மாதம் உளுந்து பயிரிட்ட விவசாயிகள் மகசூல் அதிகமாக கிடைக்கும் என நம்பி இருந்தனர். ஆனால் மழை பொய்த்ததால் உளுந்து பயிர்களில் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உளுந்து பயிர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் இரவு, பகல் பாராமல் உழைத்து பயிரிட்ட உளுந்து பயிர் லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏற்பட கூடாது என வருண பகவானை விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மழை பொய்த்தாலும், மழை பாதிப்பு ஏற்பட்டாலும் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கைகொடுக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு தற்போது வரை அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர். இதனால் தற்போது விவசாயிகள் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனவே அரசு மற்றும் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி இன்சூரன்ஸ் கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு பாதிப்பிலிருந்து விவசாயிகளை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சலுகை அளிப்பதில் பாரபட்சம்
அரசு விவசாயத்தை காக்க வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் முழு நேர விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. அரசியல் செல்வாக்கு, உள்ளவர்களுக்கு மட்டுமே வேளாண் சலுகைகள் கிடைத்து வருகிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சிறு குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.