உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வனப்பகுதியில் மாடு மேய்ச்சலுக்கு அனுமதி மறுப்பு

வனப்பகுதியில் மாடு மேய்ச்சலுக்கு அனுமதி மறுப்பு

உளுந்துார்பேட்டை; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த 15 குடும்பத்தினர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளை வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர். வனத்துறையிடம் குறிப்பிட்ட தொகை செலுத்தி பாஸ் பெற்று வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து வந்தனர்.கடந்த 3 ஆண்டுகளாக வனத்துறையினர் பாஸ் வழங்காமல் பணம் மட்டும் பெற்று வந்தனர். நேற்று முன்தினம், உளுந்துார்பேட்டை வனத்துறையினர் சென்று, வனப்பகுதியில் உள்ள மரக்கன்றுகளை மாடுகள் மேய்ந்து விடுகின்றன. பட்டி அமைக்கக் கூடாது என கூறி, பட்டி அமைந்துள்ள பகுதியில் ஜே.சி.பி., மூலம் ஆங்காங்கே பள்ளங்களை வெட்டினர். மேலும், வனத்துறைக்குட்பட்ட பகுதியில் மாடுகளை மேயவிட்டு, தகராறில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளித்தனர். இதனை கண்டித்து தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜீவ்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். வனஉரிமைச் சட்டம் 2006ன்படி, மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.

ஒரு பட்டிக்கு ரூ. 50,000 லஞ்சம்

வனத்துறை இடத்தை ஒட்டிய பகுதியில் பட்டி அமைத்து மாடு மேய்ப்பவர்களிடம், வனத்துறை அதிகாரிகள் ஒரு பட்டிக்கு 50,000 ரூபாய் கொடுங்கள் என லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணம் தர மறுத்ததால் மாட்டு பட்டியில் வனத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரங்களைக் கொண்டு பள்ளங்களை வெட்டி அடாவடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை