மாவட்ட வளர்ச்சி திட்ட பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் ஆய்வு செய்தார். அதில் பெரியமாம்பட்டு கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணி மற்றும் வேர்க்கடலை விதை பண்ணை வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வீரசோழபுரத்தில் 139.41 கோடி ரூபாய் மதிப்பில் 8 தளங்களைக் கொண்டு புதியதாக கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு கட்டுமானங்களின் தரம், திட்ட மதிப்பீடு குறித்து கேட்டறிந்தார். பின், திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4.71 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணிகள், மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் 3.75 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமான பணிகள் மற்றும் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.