உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / செம்மை கரும்பு சாகுபடியில் மாவட்ட விவசாயிகள் ஆர்வம்

செம்மை கரும்பு சாகுபடியில் மாவட்ட விவசாயிகள் ஆர்வம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் தற்போது செம்மை கரும்பு சாகுபடி முறையில் பயிர் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.மாவட்டத்தில் கச்சிராயபாளையம், மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், தியாகதுருகம், திருக்கோவிலுாரில் தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இதனால், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் தற்போது கரும்பு சாகுபடியில் பல்வேறு நவீன யுக்திகள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.செம்மை நெல் சாகுபடி, செம்மை கரும்பு மற்றும் காய்கறிகள் சாகுபடி என பயிர்களின் நடவு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.சாதாரண நடவு முறையை விட செம்மை சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் நல்ல லாபம் கிடைக்கிறது. இச்சாகுபடி முறையில் தண்ணீர் குறைவு, ஆட்கள் குறைவு, பாதிப்பின்றி பயிர்கள் வளர்வது மற்றும் அரசு மானியம் உள்ளிட்ட காரணங்களால் சாகுபடி பரப்பளவும் அதிகரித்து வருகிறது.சாதாரண முறை நடவுக்கு ஏக்கருக்கு 3, 4 டன் கரும்பு தேவைப்படும் நிலையில், செம்மை கரும்பு சாகுபடி முறைக்கு 500 கிலோ கரும்பு மட்டும் போதுமானதாக உள்ளது. நாற்று உற்பத்தி செய்வதற்கு பசுமை நிழல் வலை குடில் கூடாரம் அமைத்து, பருசீவல் செய்யப்பட்ட கரும்பு துண்டினை 'ட்ரே'யில் வைத்து எரு, மணல், செம்மண் ஆகியவை சேர்த்து கூடாரத்தில் வைத்து பராமரித்து கரும்பு நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது. 40 நாட்களுக்குள் நாற்று தயாராகிவிடுகிறது. ஏக்கருக்கு 5,000 கரும்பு நாற்றுகள் போதுமானதாகும்.சாதாரண நடவு முறையில் கரும்பு விளைச்சலில் பழுது, களைகள் அதிகம், கரையான் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனால், செம்மை கரும்பு சாகுபடி முறையில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. சாதாரண கரும்பு நாற்று ரூ.2 முதல் ரூ.2.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 40 டன் கிடைக்கும். ஆனால், செம்மை சாகுபடியில் 60 முதல் 80 டன் கரும்பு கிடைக்கிறது. இதனால், சிறு, குறு விவசாயிகளும் தற்போது செம்மை கரும்பு சாகுபடி முறையில் பயிர் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை