மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணி ஒரு மாதத்தில் முடியும் பொன்முடி எம்.எல்.ஏ., பேட்டி
திருக்கோவிலுார்: 'அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி எதையும் செய்தது கிடையாது. அரசியலுக்காக அவர் தி.மு.க., அரசை விமர்சித்து பேசுகிறார் என பொன்முடி எம்.எல்.ஏ., கூறினார்.திருக்கோவிலுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்தபின், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணியை பார்வையிட்டு, நிருபர்களிடம் கூறியதாவது:திருக்கோவிலுார் நகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் 11 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 15 துறைகளின் கீழ் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மக்கள் அதிகாரிகளைச் தேடி செல்ல வேண்டிய நிலைமை மாறி, அதிகாரிகளே அவர்களின் இல்லங்களை நாடிச் செல்லும் நிலையை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார்.மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 54 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணி இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார். திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரி பணிகளும் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது.திருக்கோவிலுார் தொகுதியில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் தி.மு.க., வில் தாமாக முன்வந்து உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி எதையும் செய்தது கிடையாது. அரசியலுக்காக அவர் தி.மு.க., அரசை விமர்சித்து பேசுகிறார்.இவ்வாறு பொன்முடி கூறினார்.