படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 10 ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களும், அதற்கு மேலான கல்வி தகுதி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து, கடந்த ஜூன் 30ம் தேதி, 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.உதவித்தொகை பெற மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்க கூடாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வரும் செப். 30 அன்று 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். 10ம் வகுப்பு தோல்விக்கு மாதந்தோறும் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000 வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. உதவித்தொகை விண்ணப்பப்படிவங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். https://employmentexchange.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. விண்ணப்பங்களை வரும் செப். 30 தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.