விபத்தால் பாதிக்கும் ஊழியர்கள் மாற்று பணி கிடைக்காமல் விரக்தி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 அரசு டெப்போக்களில் 2000க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிகின்றனர். பணியின்போது ஏற்படும் எதிர்பாராத விபத்து, உடல் பிரச்னை காரணங்களால் உடல் உறுப்புகள் இழந்து அல்லது செயலிழந்து பாதிக்கப்படுகின்றனர்.மாற்றுத்திறனாளிகளாக வாழும் இவர்களின் வாழ்வாதாரம் கருதி, உடல் தகுதிக்கேற்ப டெப்போவில் மாற்று பணி வழங்க வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் 2,500 ரூபாய் பயணப்படி வழங்க வேண்டும். வருமான வரி செலுத்த தேவையில்லை.ஆனால், அரசு டாக்டர் பரிசோதனை செய்து, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழை போக்குவரத்து கழகம் ஏற்பதில்லை. மாறாக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சான்றிதழ் வாங்கி வருமாறு அறிவுறுத்துகின்றனர். அங்கு சென்று சான்றிதழ் வாங்கி வந்து கொடுத்தாலும், மாற்றுப் பணி வழங்குவதில்லை.போக்குவரத்து சங்கங்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் பணி வழங்கப்படுகிறது. ஆனால், பயணப்படி, வரிச்சலுகை வழங்குவதில்லை. சிலர் தொடர்ந்த வழக்குகளில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு முறையாக பணி வழங்க வேண்டும் என நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.இந்த உத்தரவை பின்பற்றாமல், ஒரு சிலருக்கு 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பணி வழங்கப்படுகிறது. பலருக்கு பணி வழங்குவதே இல்லை. இதனால், மாற்றுத்திறனாளியாக உள்ளவர்கள், தங்களது ஊதியத்தை இழந்து குடும்பத்தை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் தவித்து வருகின்றனர்.எனவே, அரசு டெப்போக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.