கலெக்டர் ஆபிசில் விவசாயி தற்கொலை முயற்சி
கள்ளக்குறிச்சி : விளைநிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை தனி நபர் வெட்டியதால் மனமுடைந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 36; விவசாயி. இவர் தனது மனைவி கலா,32; பிள்ளைகள் வைஷ்ணவி, புகழன், ஹர்ஷினி ஆகியோருடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.அப்போது, அவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆனந்தை தடுத்து நிறுத்தி மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்அவர் அளித்த மனு விபரம்:நீலமங்கலம் - மாடூர் சாலையில் 1.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளது. சாலையில் இருந்து விளைநிலத்திற்கு செல்ல புறம்போக்கு தடத்தை பயன்படுத்தினர். தற்போது மழை பெய்து வருவதால் நெல் நடவு செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டேன்.முன்விரோதம் காரணமாக தனி நபர் ஒருவர் நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை வெட்டினார். இது குறித்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.