போக்கு காட்டும் வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகள் பாதிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால் பிரச்னை
வழக்கமாக வடகிழக்கு பருவமழை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதிய அளவு மழை பொழிவை கொடுக்கும். இதன் காரணமாக விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்வர். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து இதுவரை குறிப்பிட்டு சொல்லும் படியான அளவில் மழை பெய்யவில்லை.இதன் காரணமாக திருக்கோவிலூர் ஒன்றியத்தில் இருக்கும் 10 பொதுப்பணித்துறை பெரிய ஏரி உள்ளிட்ட 50க் கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டே காணப்படுகிறது. இதே நிலைதான் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நிலவுகிறது.சாத்தனூர் அணை நிரம்பி தென்பெண்ணை ஆற்றில் சீரான அளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், ஆற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் திருக்கோவிலூர், விளந்தை, கழுமரம் என ஒன்று இரண்டு ஏரிகளில் மட்டுமே தண்ணீர் நிரம்பி வருகிறது. எஞ்சிய ஏரிகள் மட்டுமல்லாது, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டே காணப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது.எனவே சம்பா சாகுபடிக்கான நாற்றங்கால் பணியை கூட துவங்காமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் விவசாயிகள். வடகிழக்கு பருவமழை காலத்தின் பாதி நாட்கள் கடந்துவிட்ட நிலையில், எஞ்சிய நாட்களிலாவது மழை பெய்யுமா? என்ற ஏக்கத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் விவசாயிகள்.அதே நேரத்தில் மானாவாரி நிலங்களில் விதைப்பு செய்த உளுந்து பயிர் வளர்ந்து இருந்தாலும், செழிப்பான வகையில் இல்லை. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்து நீர்நிலைகள் நிரம்பினால், விவசாயிகளுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மானாவாரி நிலத்தில் பயிர் செய்யப்பட்ட உளுந்து பூ வைக்கும் தருணத்தில் மழையால் பாதிக்கப்படும் என்ற பயமும் உள்ளது.மொத்தத்தில் பருவம் தவறும் மழையால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என்ற அச்சம் தான் எழுந்திருக்கிறது. அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், இனி வரும் காலங்களிலாவது பருவ மழை தீவிரமடைந்து நீர்நிலைகள் நிரம்பினால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, எதிர்வரும் கோடை காலத்தை சமாளிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.