உலர் களங்கள் கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை
தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் தானியங்களை காய வைக்க உலர் களங்களை கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தியாகதுருகம் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நெல், கரும்பு, மக்காச்சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, எள் உள்ளிட்ட விளைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இதில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு நேரடியாக சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மற்ற பயிர்களில் இருந்து கிடைக்கும் தானியங்கள் மற்றும் மணிகளை உலர வைத்து பதப்படுத்திட வேண்டும். இதற்கு போதிய உலர் களங்கள் இன்றி விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.இவற்றின் சாகுபடி பரப்பை ஒப்பிடும்போது அவைகளை உலர்த்துவதற்கு தேவைப்படும் களங்கள் மிக குறைவாகவே உள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாக களங்கள் கட்டப்பட்டுள்ளது. அதில் பல களங்கள் தானியங்களை உலர்த்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.இதனால் பெரும்பாலான விவசாயிகள், பயிர்களை சாலையில் உலர்த்தும் நிலை இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் விவசாயிகள் வாகனங்களில் அடிபடும் அபாயமும் ஏற்படுகிறது. இருப்பினும் உயிரை பணயம் வைத்து வேறு வழியின்றி சாலையில் தானியங்களை உலர்த்துகின்றனர்.அரசு, தரிசு நிலங்களில் போதிய எண்ணிக்கையில் களங்களை அமைத்து பாதுகாப்பாக விளை பயிர்களை உலர்த்துவதற்கு உரிய வழிவகை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.