பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் பெய்த மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகலுார் உட்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. கோடை காலம் மற்றும் விடுமுறை தினங்களில் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் கல்வராயன்மலைக்கு வருவது வழக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்துவங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு, கல்வராயன்மலை பகுதியில் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியதால் நீர்வரத்து அதிகரித்து பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை.