வன நிர்ணய அலுவலகம் முற்றுகை
கள்ளக்குறிச்சி,; ஒதுக்கப்பட்ட காடுகளாக மாற்றப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலகத்தை கல்வராயன்மலை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பனப்பாடி, மலையரசம்பட்டு, மொட்டையனுார், எருக்கம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வன நிர்ணய அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். பின்பு, தனி தாசில்தார் பாலசுப்ரமணியத்திடம் அளித்த மனுவில்; இந்து மலையாளி பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் மூதாதையார் காலத்தில் இருந்து இங்குள்ள நிலத்தில் பயிர் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறோம். இதில் சிலருக்கு மட்டும் வன உரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது. எருக்கம்பட்டு வன வட்டாரத்தில் இன்னாடு, வெங்கோடு, எருக்கம்பட்டு, மொட்டையனுார் கிராமங்கள் உள்ளது. இந்த 1,640 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட எருக்கம்பட்டு வன வட்டாரத்தை ஒதுக்கப்பட்ட காடுகளாக மாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்வதால் வருவாய் இழந்து, எங்களது குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, எங்களது நிலத்தை ஒதுக்கப்பட்ட காடுகளாக மாற்றக்கூடாது. அனுபவத்தின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.