கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று நடந்தது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,164 விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைள் வைத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் 3 முதல் 15 அடி வரை உயரமுள்ள 433 விநாயகர் சிலைகள் பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர்ந்து 3 நாட்கள் பூஜைகள் நடந்தது. பிரதிஷ்டை செய்து 3வது நாளான நேற்று விஜர்சன ஊர்வலம் நடந்தது. நேற்று மதியம் 1.45 மணிக்கு, கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தனி, தனி வாகனங்களில் நான்குமுனை சந்திப்பு, சேலம் சாலை, கவரைத்தெரு வழியாக மந்தைவெளி பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், விழாக்குழுவினர் சார்பில் மேள, தாளங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள் நடனமாடி, வண்ண நிறங்களை பூசிக் கொண்டு, பட்டாசுக்கள் வெடித்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து, சுவாமி சிலைகள் அனைத்தும் கோமுகி அணையில் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி, எஸ்.பி., மாதவன் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி., தங்கவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஊர்வலத்தின் போது பட்டாசு வைத்து வெடிக்கப்பட்டது. அப்போது ஒரு நபர் தீப்பற்றி வெடித்து கொண்டிருந்த பட்டாசு ஒன்றை கையில் எடுத்து சுற்றினார். இதைப்பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து இழுத்து சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.