கால்நடைகளுக்கான வைக்கோல் விலை... வீழ்ச்சி; விவசாயிகள், வியாபாரிகள் கவலை
திருக்கோவிலுார்: கால்நடைகளுக்கான வைக்கோல் கடந்த ஆண்டுகளில் ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் இந்த ஆண்டு 180 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் ஏற்றிச் செல்லப்படுகிறது. குறிப்பாக திருக்கோவிலுார் அடுத்த முதலுார் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக நெல் உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக நெல் விளைச்சல் அபரிமிதமாக இருந்ததால் வைக்கோல் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.இதனால், வைக்கோல் விலை மளமளவென குறைந்துள்ளது. மாடு வளர்ப்போருக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் வைக்கோல் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மொத்த வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.இதுகுறித்து முதலுாரைச் சேர்ந்த வைக்கோல் வியாபாரி அரிகிருஷ்ணன் கூறியதாவது:இப்பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் நேரடியாக வைகோலை வாங்கி வந்து, கட்டு கட்டி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கின்றோம்.இந்த ஆண்டு முதல் போகமான சம்பா நெல் விளைச்சல் அதிகரித்ததால் வைகோல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் விவசாயிகளிடம் ஒரு கட்டு 200 ரூபாய்க்கு வாங்கி, 300 ரூபாய் அதற்கு மேலும் விலை போனது.ஆனால், இந்த ஆண்டு விவசாயிகளிடம் 140 ரூபாய்க்கு வாங்கி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாங்களே நேரில் எடுத்துச் சென்று 180 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.வைக்கோல் ஏற்றிச்செல்ல 40க்கும் மேற்பட்ட லாரிகள் சொந்தமாக வைத்துள்ளோம். இந்த வருவாய் மூலம் லாரிகளுக்கு மாத தவணை கூட கட்ட முடியாத நிலை உள்ளது. இந்த விலை வீழ்ச்சி வியாபாரிகளான எங்களுக்கு மட்டுமின்றி வியாபாரிகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.தற்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டாம் போகமாக மக்காச்சோளம் அதிகம் பயிரிடுவதால், நெல் விளைச்சல் குறைந்துள்ளது.இதன் காரணமாக மேல்மருவத்துார், கடலுார், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளதால் அங்கு சென்று வைக்கோல் கொள்முதல் செய்து வருகிறோம். இங்கும் அதே விலைதான் போகிறது. வைக்கோல் விலை குறைந்திருப்பது விவசாயிகளுக்கும் வியாபாரிகளான எங்களுக்கும் நஷ்டம் என்றாலும், கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இவ்வாறு அரிகிருஷ்ணன் கூறினார்.