மின்கம்பி உரசியதால் கூரை வீடு எரிந்து சேதம்
சின்னசேலம் : தொட்டியம் கிராமத்தில் மின் கம்பி உரசியதில் கூரை வீடு எரிந்து சேதமானது. சின்னசேலம் அடுத்த தொட்டியம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மண்ணாங்கட்டி, 45; விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மண்ணாங்கட்டி உட்பட வீட்டில் உள்ள அனைவரும் விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர். பகல் 1:00 மணிக்கு கூரை வீட்டின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பி கூரை மீது உரசியது. இதனால் கூரை வீடு தீப்பற்றியது. மளமளவென பரவிய தீயால் கூரை வீடு முழுதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சின்னசேலம் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், நிவாரண பொருட்கள் மற்றும் ரூ10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். வருவாய் துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கி ரூ 8 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. ஆர்.ஐ., வெங்கடேசன், பி.டி.ஓ., க்கள் சுமதி, சவுரிராஜன் உட்பட அரசு அதிகாரிகள் விபத்து குறித்து விசாரித்தனர்.