தீவிரமடையும் பருவமழை சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து துவக்கம்
திருக்கோவிலுார் : வடகிழக்கு பருவமழை துவங்கியிருக்கும் நிலையில், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக இருப்பது சாத்தனுார் அணை. இது நிரம்பினால் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுக்கும் நீரால், ஆயிரக்கணக்கான ஏரிகள் நிரம்பி, விவசாயம் செழிக்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை துவங்கி இருக்கும் சூழலில், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,260 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 119 அடியில், 97 அடி, அதாவது 7,321 மில்லியன் கனடியில், 3,820 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணை கிட்டத்தட்ட 46.14 சதவீதம் நிரம்பி உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும்என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.