கள்ளக்குறிச்சியை கூட்டணி கட்சிக்கு தரக்கூடாது: தி.மு.க., எதிர்பார்ப்பு
க ள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகராக உள்ள கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி கடந்த 2008 ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் அழகுவேல் பாபு மற்றும் தி.மு.க., கூட்டணியின் வி.சி., கட்சி வேட்பாளர் பாவரசு இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் ஒரு லட்சத்து 11,249 ஓட்டுகள் பெற்று அழகுவேல் பாபு வெற்றி பெற்றார். பாவரசு 51 ஆயிரத்து 251 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். வெற்றி வித்தியாசம் 40 ஆயிரத்து 2 ஓட்டுகளாகும். அதைத்தொடர்ந்து 2016 தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகியவற்றுக்கிடையே நேரடி போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளராக பிரபு, தி.மு.க., வேட்பாளராக காமராஜ் களம் கண்டனர். இதில் பிரபு 90 ஆயிரத்து 108 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காமராஜ் 86 ஆயிரத்து 4 ஓட்டுகள் பெற்றார்.வெற்றி வித்தியாசம் 4 ஆயிரத்து 104 ஓட்டுக்களாகும். கடந்த 2021 தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 3 வது முறையாக அ.தி.மு.க., இத்தொகுதியில் நேரடியாக போட்டியிட்டது. அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார், காங்., வேட்பாளர் மணிரத்தினம் ஆகியோர் களம் கண்டனர். முடிவில் செந்தில்குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 643 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். மணிரத்தினம் 84 ஆயிரத்து 752 ஓட்டுக்கள் பெற்றார். வெற்றி வித்தியாசம் 25 ஆயிரத்து 891 ஓட்டுகள். இதன் மூலம் அ.தி.மு.க., தொடர்ந்து 3 முறை 'ஹார்ட்ரிக்' வெற்றியை கள்ளக்குறிச்சி தொகுதியில் பதிவு செய்து சாதனை படைத்தது. தி.மு.க.,வை பொருத்தவரை இத்தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்த போதெல்லாம் 2011 தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டுக்களும், 2021 தேர்தலில் 25 ஆயிரம் ஓட்டுகளும் பின்தங்கியது. நேரடியாக தி.மு.க., போட்டியிட்ட 2016 தேர்தலில் வெற்றி வித்தியாசம் 4 ஆயிரத்து 104ஓட்டுக்கள் மட்டுமே. வரும் தேர்தலில் கள்ளக்குறிச்சியை கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்க்காமல் வெற்றிவாகை சூட தி.மு.க., நேரடியாக களம் காண வேண்டும் என்று உடன்பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர்.