கல்வராயன்மலை நீர் வீழ்ச்சிகள், கோவில்கள். மேம்படுத்தப்படுமா?: சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் கல்வராயன்மலை நீர் வீழ்ச்சிகள், பழமையான கோவில்களை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில், 'ஏழைகளின் மலை பிரதேசம்' என்றழைக்கப்படும் கடல் மட்டத்திலிருந்து 1,000 அடி முதல் 3,800 அடி உயரம் கொண்ட கல்வராயன்மலை உள்ளது. இங்குள்ள கரியாலுாரில் சிறுவர் பூங்கா, படகுத்துறை, மூங்கில் குடில்கள் உள்ளன. அத்துடன் கருமந்துறையில் அரசு பழ பண்ணை, பெரியார், மேகம், மான்கொம்பு, கவியம், சிறுகலுார், எட்டியாறு போன்ற நீர் வீழ்ச்சிகளும் உள்ளன. அதேபோல் கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் உள்ளன. இதுதவிர, ஆன்மிக தலங்களாக திருக்கோவிலுார் தென்பெண்ணை நதியின் நடுவில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவில், நடுநாட்டு சிவத்தலங்களில் 11ஆவது தலமான தேவாரத்தில் பாடப்பெற்ற வீரட்டேஸ்வரர் கோவில், தமிழகத்திலேயே மிகப்பெரிய பெருமாள் சிலைகொண்ட ஆதிதிருவரங்கம் கோவில் உள்ளது. ரிஷிவந்தியத்தில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலும், சின்னசேலம் அருகே ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில் உட்பட ஏராளமான கோவில்கள் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருகில் கடலுார், விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை போன்ற வெளிமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து கணிசமான சுற்றுலா பயணிகள் கல்வராயன்மலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆன்மிக தலங்களுக்கு வருகின்றனர். ஆனால் சுற்றுலா தலங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது. குறிப்பாக, கல்வராயன்மலையில் உள்ள மேகம், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல முறையான வழித்தடங்கள் இல்லை. இளைஞர்கள் மட்டுமே செல்ல கூடிய டிரக்கிங் பாதை மட்டுமே உள்ளது. இதனால் சாதாரண மக்களால் செல்ல முடியாத நிலை உள்ளது. நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் சுலபமாக சென்று வரும் வகையில் முறையான வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவகங்கள், விடுதிகள் ஏற்படுத்துவதுடன், பாழடைந்து கிடக்கும் பூங்கா, படகு துறைகளை சீர்செய்ய வேண்டும். பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்ல, கூடுதல் பஸ் வசதிகளை உருவாக்கி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தங்குமிடங்களையும் ஏற்படுத்திட வேண்டும். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். தொழில் வளர்ச்சியே இல்லாத கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுலா மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தலாம். எனவே, கல்வராயன்மலை பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு அப்பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.