மணிமுக்தா அணை ெஷட்டர் சீரமைப்பு
கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை ெஷட்டரின் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மூடப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. அணையின் மொத்த கொள்ளவு 36 அடி ஆகும்.மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் சேமித்து வைத்து விவசாய பாசனத்திற்கு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும்.இதன் மூலம் 5,493 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. தொடர் மழை பெய்து நீர் வரத்து அதிகரிக்கும் போது, அணையின் பாதுகாப்பு கருதி புதிய மற்றும் பழைய ஷெட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.இதில் பழைய ஷெட்டர்கள் மிக பழமை வாய்ந்தது என்பதால், ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்கும் முன்னர் பொதுப்பணித்துறை (நீர் வளம்) மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதேபோல் நடப்பாண்டும் மூன்று ஷெட்டர்களிலும் துருக்களை நீக்குதல், ரோலர் சரி செய்தல், ரப்பர் சீல், பிளேட் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு, ெஷட்டர்கள் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை நீர் அணையில் வந்து தேங்கியபோது, 3வது ஷெட்டரில் தண்ணீர் கசிந்து வெளியேறியது.இதனால் மீண்டும் ெஷட்டர் திறக்கப்பட்டு பழுது சரி செய்யும் பணிகள் நடந்தது. இதில் அணையில் தேங்கிய தண்ணீர் மற்றும் வரத்து நீர் முழுவதும் தொடர்ந்து வெளியேறியது. அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து தண்ணீர் கசிவு இருந்த ெஷட்டர் முழுமையாக சரிசெய்யப்பட்டு மீண்டும் மூடப்பட்டது.இதனையடுத்து அணையில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளது.