ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் தர்ணா
கள்ளக்குறிச்சி : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றினை முறையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.அதுமட்டுமின்றி, ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களை அனுமதிப்பதில்லை. மீறி சென்றால் தரக்குறைவாக பேசுவதாக கூறி நேற்று ஊராட்சி அலுவலகம் முன் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை மூங்கில்துறைப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.