உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம், கச்சிராயபாளையம் பகுதியில் லேசான நில அதிர்வு

சங்கராபுரம், கச்சிராயபாளையம் பகுதியில் லேசான நில அதிர்வு

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம், கச்சிராயபாளையம் பகுதியில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் நெடுமானுார், சேஷசமுத்திரம், பொய்குணம், ஜவுளிக்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் நேற்று காலை 9.16 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் அனைவரும் உடனடியாக வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த நில அதிர்வு 2, 3 வினாடிகள் உணரப்பட்டது. நில அதிர்வால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

கச்சிராயபாளையம்

கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை, குதிரைச்சந்தல், தாவடிப்பட்டு, கரடிசித்துார், செல்லம்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனை உணர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அதிர்வு தொடர்பான ஆராய்ச்சி மையம் எதுவும் இல்லை. இதனால் சங்கராபுரம், கச்சிராயபாளையம் சுற்று வட்டார பகுதியில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு தொடர்பாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களின் விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ