உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஐகோர்ட் உத்தரவின்படி பள்ளிவாசல் இடத்திற்கு சீல்

ஐகோர்ட் உத்தரவின்படி பள்ளிவாசல் இடத்திற்கு சீல்

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, கீரனுாரில் மூன்று ஏக்கர் இடம் தொடர்பாக வக்பு வாரியம் மற்றும் தனி நபருக்கு இடையேயான பிரச்னையில் கோர்ட் உத்தரவின் படி இடத்திற்கு சீல்வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தப்பேட்டை கீரனுார் , துணை மின் நிலையம் அருகே மூன்று ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளது. இது வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் எனக் கூறி திருக்கோவிலுார் வக்பு வாரிய தலைவரான பசல்முகம்மது மற்றும் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் முள் புதர்களை அகற்றி மசூதி கட்டினர்.இந்நிலையில் திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஜி.ஓ., நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி ஜெயலட்சுமி, 65; தனது மாமனார் பாவாடை அனுபவத்தில் இருந்து வந்த இடத்தை முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக போலீசில் புகார் அளித்தார்.தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் இரு தரப்பினரும் பிரவேசிக்க கூடாது. கட்டுமானம் ஏதும் செய்யக்கூடாது. அப்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்த பிரச்னை குறித்து திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் மேல் விசாரணை நடத்தினார். வக்பு வாரிய நிர்வாகிகள் எவ்வித கட்டுமான பணிகளும் செய்யாமல், தற்காலிக நிலையில் வழிபாடு செய்து கொள்ள அனுமதித்தார்.அதன்பேரில் அந்த இடத்தில் தொழுகை நடத்தப்பட்டு வந்தது. இது குறித்து ஜெயலட்சுமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சம்பந்தப்பட்ட இடம் பழைய நிலையிலேயே தொடர தடையாணை பெற்றார்.நேற்று திருக்கோவிலுார் தாசில்தார் ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கோர்ட் உத்தரவை காண்பித்து சீல் வைக்கப் போவதாக தெரிவித்தனர். இதற்கு முஸ்லிம் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் மாலை 5:00 மணிக்கு முஸ்லிம் தரப்பினர் பூட்டி வருவாய்த் துறையினரிடம் சாவியை ஒப்படைத்தனர். பின்னர் முஸ்லிம் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து கலைந்து சென்று, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பாக கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை