மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த தாய், மகன்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் தாயும், மகனும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பெத்தானுார் கிராமத்தை சேர்ந்த பூவான் மகன் பாலு, தனது தாய் அழகம்மாளுடன் மனு அளிக்க வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது, மனுவுடன் ஒரு கேனில் மண்ணெண்ணெய் எடுத்து வந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். அவரது மனுவில்; கடந்த 1984ம் ஆண்டு ராயர்பாளையம் பல்லக்காடு பகுதியில் விவசாய நிலம் வாங்கி பயிர் செய்து வருவதாகவும், கடந்த ஒரு மாதமாக ராயர்பாளையத்தை சேர்ந்த முத்துவேல் வழித்தடத்தை மறித்து, விவசாயம் செய்வதை தடுத்து வருவதாகவும், நிலத்திற்கு நிரந்தர வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.