| ADDED : நவ 13, 2025 06:34 AM
சங்கராபுரம்: தேசிய அளவிலான கயிறு தாண்டுதல் போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், ரேவாவில் 22வது ஜூனியர் கயிறு தாண்டுதல் போட்டி நடந்தது. டில்லி, ஹரியானா, சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட கயிறு தாண்டுதல் சங்கத்தில் இருந்து 18 பேர், மற்றும் தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்கத்தில் இருந்து 23 பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் தமிழ்நாடு அணி மொத்தம் 21 தங்கப்பதக்கம், 13 வெள்ளி பதக்கம், 12 வெண்கல பதக்கம் என மொத்தமாக 46 பதக்கங்களை வென்றது. மேலும், ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பில் தமிழ்நாடு அணி இரண்டாமிடம் பிடித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்க செயலாளர் சுகுமாறன், கள்ளக்குறிச்சி மாவட்ட கயிறு தாண்டுதல் சங்க தலைவர் குசேலன், பயிற்சியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.