உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் புதிய போலீஸ் ஸ்டேஷன் தேவை! 70 கி.மீ., துாரம் பயணம் செய்து புகார் தெரிவிக்கும் அவல நிலை

கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் புதிய போலீஸ் ஸ்டேஷன் தேவை! 70 கி.மீ., துாரம் பயணம் செய்து புகார் தெரிவிக்கும் அவல நிலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு உதயமானது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் அரசு துறையின் பல்வேறு மாவட்ட அலுவலங்கள் செயல்படுகிறது. போலீஸ் துறையில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய மூன்று டி.எஸ்.பி., அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனும், அனைத்து மகளிர், போக்குவரத்து, மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஸ்டேஷனும் உள்ளது.இதில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் 73 போலீசார் என மொத்தம் 79 பேர் உள்ளனர். கள்ளக்குறிச்சி நகரம் (21 வார்டுகள்), சுற்று வட்டாரத்தில் 24 கிராமங்கள் போலீஸ் நிலைய கட்டுபாட்டில் உள்ளது. இங்குள்ள போலீசார் மாவட்ட போலீஸ் துறை அலுவலத்தில் அயல் பணி, கோர்ட் பணி, சம்மன் கொடுக்கும் பணி, அரசு மருத்துவமனை பாதுகாப்பு, விபத்து சான்று வாங்கும் பணிக்கு பலர் சென்று விடுகின்றனர். சிலர் மருத்துவ விடுப்பிலும் சென்று விடுகின்றனர்.மேலும் மாவட்டம் உதயத்திற்கு பின் வாரந்தோறும் குறைகேட்பு கூட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல், விழிப்புணர்வு ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகள் அதிகரித்துவிட்டது. முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகள் வருகைக்கும், கள்ளக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிக்கு சென்றுவிடுகின்றனர்.இதனால், ஸ்டேஷனில் போதிய அளவிலான போலீசார் இல்லாததால், வழக்குளை விரைவாக விசாரிக்கவும், குற்றவாளிகளை கைது செய்ய முடிவதில்லை. தற்போதுள்ள குறைந்த அளவு போலீசாருக்கும் பணி சுமை அதிகரித்துள்ளது. எனவே, மக்களின் புகார்களுக்கு விரைவான நடவடிக்கை கிடைக்க, கிராமங்களை உள்ளடக்கிய புதிய தாலுகா போலீஸ் நிலையத்தை உருவாக்க வேண்டும்.அதேபோல், கல்வராயன்மலை ஒன்றியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மலையில் உள்ள கரியாலுார் போலீஸ் நிலைய கட்டுபாட்டில் 13 ஊராட்சிகளுக்குட்பட்ட 142 கிராமங்கள் உள்ளன. ஒரு சப்இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த போலீஸ் நிலைய எல்லை, சுற்று வட்டார பரப்பளவில் 70 கி.மீ., துாரம் வரை செல்கிறது. மலைவாழ் மக்கள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டுமானால் ,50 முதல் 70 கி.மீ., பயணம் செய்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. புகார் தொடர்பாக போலீசாரும் உடனடியாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் விசாரணைக்கோ அல்லது ரோந்து பணிக்கோ போலீசாரால் செல்ல முடிவவில்லை. இதனால் மலையில் பல இடங்களில் நடக்கும் கள்ளச்சாராயம், திருவிழா, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கும் போலீசார் செல்வதில்லை.எனவே, கரியாலுார் போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரித்து வஞ்சிக்குழி, கிளாக்காடு, இன்னாடு உள்ளிட்ட சுற்று வட்டார ஊராட்சிகளின் 60க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் சேராப்பட்டு தலைமையிடமாக கொண்டு புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.போலீசாரின் பணி சுமையை குறைக்கவும், குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு விரைவான நடவடிக்கை கிடைக்க, கள்ளக்குறிச்சி மற்றும் சேராப்பட்டில் புதிதாக போலீஸ் நிலையங்கள் அமைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி