உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி, மகனுடன் என்.எல்.சி., தொழிலாளி தற்கொலை?

மனைவி, மகனுடன் என்.எல்.சி., தொழிலாளி தற்கொலை?

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, மனைவி மற்றும் மகனுடன் என்.எல்.சி., தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்கொலையா என, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன், 53; நெய்வேலி என்.எல்.சி.,யில் மிஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவி,36; மகன் பிரவீன்குமார்,12; என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நெய்வேலியில் குடியிருந்து வந்த முத்துக்குமரன், தனது பெரியம்மா இறந்ததால் கடந்த 2ம் தேதி உளுந்துார்பேட்டைக்கு வந்துவிட்டு சென்றார். நேற்று காரியம் நடக்க இருந்ததால், முத்துக்குமரன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு நெய்வேலியில் இருந்து அஜீஸ் நகருக்கு வந்தார்.இந்நிலையில், நேற்று காலை அஜிஸ் நகர் அருகே உள்ள கல் குட்டையில், முத்துக்குமரனின் மனைவி தேவி, மகன் பிரவீன்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தனர். முத்துக்குமரன் கல் குட்டையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள் இதனை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எடைக்கல் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துக்குமரனின் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல்போன், பைக் சாவியை போலீசார் கைப்பற்றினர்.மூன்று பேரும் நெய்வேலியில் இருந்து அஜீஸ் நகருக்கு வந்து தற்கொலை செய்து ஏன் என்பது மர்மமாக உள்ளது. எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பிக்கு பணம் அனுப்பியது ஏன்?

முத்துக்குமரனுக்கு மூன்று சகோதரர்கள், 2 சகோதரிகள். அதில் இருவர் இறந்துவிட்டனர். முத்துக்குமாரனின் தம்பி ரகுநாதன், சகோதரி மீனாகுமாரி ஆகிய இருவரும் அஜீஸ் நகரில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தம்பி ரகுநாதனின் வங்கி கணக்கிற்கு, முத்துக்குமரன் 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு முன்னதாக பணம் ஏதும் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், திடீரென தம்பிக்கு பணம் அனுப்பி வைத்ததால். முத்துக்குமரன் தற்கொலைக்கு முன்னதாகவே திட்டம் தீட்டி, தங்களது இறுதி சடங்கு செய்வதற்காக பணம் அனுப்பி இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி