மரவள்ளி சாகுபடியில் வெளிறிய இலைகள்; வேளாண் அதிகாரி விளக்கம்
சங்கராபுரம்; மரவள்ளி சாகுபடியில் இலைகள் வெளிறி காணப்படுவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து சங்கராபுரம் வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் கூறுகையில், 'சங்கராபுரம் பகுதியில் மரவள்ளியில் தற்போது இலைகள் வெளிறி காணப்படுகிறது. இலை நரம்புக்கு இடைபட்ட பகுதி மஞ்சள் ஆவதால் இலைகளில் கோடுகள் போன்ற அமைப்பு மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் நுண்ணுாட்ட சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.இதனால் மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து நல்ல மகசூல் பெற மரவள்ளி நுண்ணுாட்ட மருந்தினை இலை வழியாக தெளிக்க வேண்டும்.தற்போது மரவள்ளி நுண்ணுாட்ட மருந்து காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது.ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் மருந்து தேவை. மரவள்ளி நட்ட 2 ம் மாதம் முதல் 6ம் மாதம் வரை இலை வழியாக தெளிப்பு செய்யலாம்.தேவைப்படுவோர் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்' என்றார்.