ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம் அஞ்சல்துறை அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அஞ்சலக ஊழியர்களை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தவாறு ஆவணங்களை சமர்ப்பித்து உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், 'உயிர் வாழ் சான்றிழை' தங்களது துறைக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை பெற ஓய்வூதியதாரர்கள் அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை இருந்ததால் சிரமமடைந்தனர். இதையொட்டி, இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே சென்று உயர் வாழ் சான்றிதழ் சேவையை வழங்குகிறது. ஓய்வூதியதாரர்கள் தங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள அஞ்சலகத்தையோ அல்லது தபால்காரர்களையோ தொடர்பு கொண்டு, ஆதார் கார்டு, ஓய்வூதிய கட்டளை எண், வங்கி கணக்கு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சலக ஊழியர்கள் பயோ மெட்ரிக் சாதனங்கள் மூலம் ஆதார் சரிபார்ப்பினை மேற்கொள்வர். தொடர்ந்து, ஓய்வூதியதாரர்களின் அடையாளத்தை ஆதார் எண், கைரேகை அல்லது கண் கருவிழி மூலமாக உறுதிப்படுத்தி, உடனடியாக உயிர் வாழ் சான்றிதழை ஐ.பி.பி.பி., என்ற செயலியில் உருவாக்குவர். அவ்வாறு உருவாக்கப்பட்ட சான்றிதழ் 'லைப் சர்டிபிகேட் ரெபோசிடரி' எனும் இணையத்தில் சேமிக்கப்படும். இதனை அரசு, வங்கிகள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் துறைகள் இணைய வழியாக பெற்றுக்கொள்ளும். பதிவு முடிந்ததும் ஓய்வூதியதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்துதல் செய்தி அனுப்பப்டும். இதற்கு ரூ.70 செலுத்த வேண்டும். இந்த சேவை பாதுகாப்பானது மற்றும் விரைவானது. விருத்தாச்சலம் அஞ்சல் கோட்டத்தில் முதியவர்கள், படுக்கை நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.