குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தில் குடிநீர் வாரததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.சில தினங்களாக காலனி பகுதியில் சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7:55 மணியளவில் காலி குடங்களுடன், கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் புதுஉச்சிமேடு காலனி பஸ்நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் மற்றும் தியாகதுருகம் பி.டி.ஓ., கொளஞ்சி சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், 15வது நிதிக்குழு மானியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் கிணறு மற்றும் புதிய கைபம்பு அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.இதையடுத்து 8:50 மணியளவில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.