தீபாவளி பரிசு வாரி வழங்க தயாராகும் அரசியல் கட்சிகள்
சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான பணியை முன்கூட்டியே துவக்கி விட்டனர். குறிப்பாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி முதல் கிராம ஊராட்சிகள் வரை உள்ள வார்டு வாரியாக வாக்காளர்கள் கணக்கெடுத்து அவர்கள் எந்தெந்த கட்சியை சார்ந்தவர்கள் என்கின்ற துல்லியமான கணக்குகளை எடுத்து வைத்துள்ளனர். மற்ற கட்சிகளை விட ஆளுங்கட்சியான தி.மு.க., பணத்தை வாரி இறைத்து பூத் கமிட்டி முகவர்கள் தொடங்கி கட்சி நிர்வாகிகள் வரை தீவிர தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களின் ஆதரவை தேர்தல் நேரத்தில் சென்று கேட்பதைவிட முன்கூட்டியே அவர்களை சரிகட்டி தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு தீபாவளி பண்டிகைக்கு பரிசுகளை வாரி வழங்கும் திட்டத்தை இரு கட்சிகளும் செயல்படுத்த உள்ளனர். வேட்டி, சேலை, விளக்கு, சில்வர் பாத்திரம் , ஸ்வீட் உள்ளிட்டவைகளை அன்பளிப்பாக கொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து வரும் கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போதும் பல்வேறு விதமான பரிசுகளை கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வாக்காளர்களுக்கே இவ்வளவு பரிசு என்றால் முக்கிய நிர்வாகிகள் தொடங்கி அடுத்த கட்ட நிர்வாகிகள் வரை அனைவருக்கும் கடந்த ஆண்டை விட கூடுதலாக இம்முறை பரிசுகளோடு பணமும் அள்ளிக்கொடுக்க உள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே அரசியல் கட்சி நிர்வாகிகளும், வாக்காளர்களும் பரிசு மழையில் நனைய தயாராகி வருகின்றனர்.