பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியை கலெக்டர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த தொடு சிலம்பம் மற்றும் கால்பந்து போட்டியினை கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்கள் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.நிகழ்ச்சயில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் மற்றும் விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரநிதிகள் பங்கேற்றனர்.மேலும், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி, சின்னசேலம், தியாகதுருகம் அரசு பள்ளி விளையாட்டு மைதானங்களில் கல்லுாரி மாணவிகளுக்கான வாலிபால், செஸ் போட்டிகள், நீச்சல் போட்டிகள், இறகு பந்து, கேரம், கபடி உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.