அரசியல் கூட்டங்களை உற்று கவனிக்கும் தி.மு.க., தேர்தல் களத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள்
தமிழகத்தை பொறுத்தவரை சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என்ற இரு பிரதான கட்சிகளிடையே போட்டி நிலவும். இரண்டு பிரதான கட்சிகளின் தலைமையில், பா.ஜ., பா.ம.க., தே.மு.தி.க., காங்., வி.சி., கம்யூ., உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. கருத்து வேறுபாட்டினால் தேர்தலின் போது கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும். தனக்கென தனி ஓட்டு வங்கியை வைத்துள்ள நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. தற்போதுள்ள சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் ஐ.டி., விங்க் நிர்வாகத்திற்கு அதிக முக்கியத்தும் வழங்குகிறது. தற்போது நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அரசியல் வியூகங்களை வகுக்கவும், கருத்து கணிப்பு மேற்கொள்ளுதல், களப்பணியில் ஈடுபடுதல், மக்களை கவரும் வகையிலான தேர்தல் வாக்குறுதி தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆலோசக நிறுவனங்களை நாடுகிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை பிரதான கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆளும்கட்சியாக உள்ள தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேபோல், இழந்ததை அடைய வேண்டும் என்ற லட்சியத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தி.மு.க., தனது 'பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க்' சுருக்கமாக 'பென்' என்ற நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிக்காககளமிறக்கியுள்ளது. ஒரு லோக்சபா தொகுதிக்கு 2 ஊழியர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் நடைபெறும் மற்ற அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், உட்கட்சி நிகழ்வுகள், தீராத மக்கள் பிரச்னைகள், மற்ற கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் விபரம், வெற்றி பெற வாய்ப்புள்ள நபர்களின் செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், 'பென்' நிறுவன ஊழியர் களுக்கு தினமும் பல்வேறு விதமான 'அசைன்மெண்ட்' களும் வழங்கப்படுகிறது.