ஆர்.டி.இ., சேர்க்கைக்கான கல்வி கட்டணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் ஆர்.டி.இ., இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் ஆர்.டி.இ., இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் மூர்த்தி, உறுப்பினர்கள் பழனியாப்பிள்ளை, சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விளக்கி பேசினர். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசின் வழிகாட்டுதலின்படி ஆர்.டி.இ., மூலம் மாணவர்கள் இலவச கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ஆர்.டி.இ., திட்டத்தின் மூலம் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்காததால், அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாகனங்கள் பராமரிப்பு செலவுகள் உட்பட பல வகையில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பள்ளி தலைமையாசிரியை குமாரி, ஆசிரியைகள், வாகன இயக்குனர்கள், உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.