அரசம்பட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா விவகாரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
கள்ளக்குறிச்சி:அரசம்பட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பிரச்னை காரணமாக இரு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழாவை நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை எழுந்தது. அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்படாததால் இந்தாண்டு நடக்க இருந்த தேர்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு தரப்பினர் அமைதியான முறையில் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். எதிர்தரப்பினரும் ஐகோர்ட்டை அணுகி, 4 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களை புறக்கணித்து திருவிழா நடத்த முயற்சிப்பதாக கூறி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட், அரசம்பட்டு கிராமத்தில் உள்ள 12 வார்டுகளிலும் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து திருவிழாவை நடத்த வேண்டும். அதற்கு 3 நாட்கள் கால அவகாசமும் அளித்து கடந்த 19ம் தேதி உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவிட்டு பல நாட்கள் ஆகியும் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., குழுவை அமைக்கவில்லை. இதனை கண்டித்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி குழு அமைத்து, தேர்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அரசம்பட்டு கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:30 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். தொடர்ந்து அனைவரும் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.டி.ஓ., லுார்துசாமி, ஏ.டி.எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி., தங்கவேல், சங்கராபுரம் தாசில்தார் வைரக்கண்ணன் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பிலும் பொதுவான நபர்களைக் கொண்டு 8 பேர் கொண்ட குழு அமைத்து, அவர்களின் முன்னிலையில் அமைதியான முறையில் தேர் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., ஒப்புதல் அளித்தார். அதனையேற்று, இரு தரப் பினரும் மதியம் 2:00 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டரை மணி நேரம் பரபரப்பு நிலவி யது.