| ADDED : நவ 09, 2025 06:27 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்தையன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முகாமில், ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், மொபைல்போன், முகவரி மற்றும் குடும்ப தலைவர் மாற்றம், பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம், ரேஷன் கார்டு நகல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 32 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில், இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம், வட்ட பொறியாளர் அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமிற்கு தனி தாசில்தார் சிலம்பரசன் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் கார்டு புதிய உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட 53 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. முகாமில் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.