பெங்களூருவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி
கள்ளக்குறிச்சி : பெங்களூருவில் இயற்கை பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கர்நாடகா மாநிலம், பெங்களூரு ெஹன்னுாரில் கடந்த 22ம் தேதி பெய்த கன மழை காரணமாக கட்டுமானப் பணி நடந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணிக்குச் சென்றிருந்த கள்ளக்குறிச்சி அடுத்த கூந்தலுார் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோர் இறந்தனர்.இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், நிவாரண நிதிக்கான காசோலையை இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கலெக்டர் பிரசாந்த் நேற்று வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, தாசில்தார் கமலக்கண்ணன் உடனிருந்தனர்.