லட்சுமி நாராயண பெருமாள் கோவில் புனரமைக்க கோரிக்கை
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே பராமரிப்பில்லாமல் இருக்கும், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமிநாராயண பெருமாள் கோவிலை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துாரில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், கடந்த, 1710 ம் ஆண்டு ராணி மங்கம்மா நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ராம நவமி உற்சவம், சீதா கல்யாண வைபவம் விமரிசையாக நடக்கிறது.இங்கு அதிகாலையில் சூரிய உதயத்தின் போது கோவில் வாசலில் உள்ள நந்தி சிலையில் சூரிய ஒளி பட்டு நேரடியாக கருவறையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் மீது படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த கோவில் கடந்த, 30 ஆண்டுகளாக பாழடைந்து, கோவில் ராஜ கோபுரங்கள் சிதிலம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவில் கருவறையில் விரிசல் காணப்படுகிறது. கோவில் மேல் உள்ள கோபுரங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:இந்த கோவிலுக்கு சொந்தமாக, 30 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அதில் இருந்து வரும் வருவாயை அறநிலையத்துறை எடுத்து கொள்கிறது. ஆனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இந்த கோவிலை புனரமைக்கக்கோரி, அரசுக்கு பல தடவை மனு அனுப்பி உள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் கிடையாது.இது குறித்து அறநிலை யத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.