சேகோ, கடுக்காய் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை: உழவர் சந்தைகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த குறைதீர் கூட்டத்தில், பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கருப்பு நிற பேட்ஜ் அணிந்தவாறு பங்கேற்றனர். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பத்மஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது: கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும், வனப்பகுதியை அதிகமாக கொண்டுள்ள கள்ளக்குறிச்சியில் வனக்கல்லுாரி அமைக்க வேண்டும். கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்ற வி.ஏ.ஓ., மற்றும் சர்வேயர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழிகாட்டி நிலமதிப்பு நிர்ணயம் செய்யப்படாமல் இருப்பதால் விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனர். சிறுபுலியூர் கிராமத்தில் மனித கழிவுகள் விளைநிலத்தில் கொட்டப்படுகிறது. விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை. குறிப்பாக, மனுவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் முழுமையாக படிக்காமல் பதில் தெரிவிக்கின்றனர். மரவள்ளியில் இலைப்பயிர் தாக்குதல் அதிகமாக உள்ளது, வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானிய விலையில் ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் குளிரூட்டப்பட்ட அறைகள் வசதி ஏற்படுத்த வேண்டும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், சொட்டுநீர் பாசனத்தில் போடப்படும் பைப்புகள் 7 ஆண்டுகள் வரை நீடிப்பதில்லை, எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனத்தை புதுப்பிக்க வழிவகை செய்ய வேண்டும், பயிர்களுக்கு காப்பீடு செய்யும் போது ஒரு கிராமத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இதை மாற்றி தனிநபர் இன்ஸ்யூரன்ஸ் முறையை கொண்டு வர வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக புதர் மண்டியுள்ள சாத்தனுார் வலது புற கால்வாயை துார்வார வேண்டும். மூங்கில்துறைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து வெளியாகும் கரித்துகள்களை கட்டுப்படுத்த வேண்டும், விபிஜி ராம்ஜி திட்டத்தில் முதியவர்களின் கருவிழி சரியாக பதிவாகததால் வேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில கடைகளில் யூரியா விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது, நீர்நிலைகளில் இரவு நேரங்களில் கிராவல் மண்ணை திருடி வீட்டுமனையில் கொட்டுகின்றனர். சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை வழங்கப்படாமல் உள்ளது, மாவட்டத்தில் சேகோ தொழிற்சாலையும், கல்வராயன்மலையில் கடுக்காய் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும், தென்பெண்ணை ஆற்றையும், கெடிலம் ஆற்றையும் இணைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து விவசாயிகள் பேசினர். முன்னதாக பல்வேறு விவசாய பயனாளிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைத்தொகுப்பு, சிறுதானியங்கள் மற்றும் கம்பு செயல் விளக்க தொகுப்பு, நுண்ணீர் பாசன திட்ட பணி ஆணை ஆகியவற்றை கலெக்டர் பத்மஜா வழங்கினார். கருப்பு நிற பேட்ஜ் அணிந்து வந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் தங்களது சட்டையில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்தவாறு இருந்தனர். இது குறித்து கேட்ட போது, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும், இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும், முதல்வர் ஜோசப்விஜய்க்கும் வலியுறுத்தும் வகையில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்துள்ளோம் என தெரிவித்தனர்.