மேலும் செய்திகள்
மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம்
15-Oct-2025
கள்ளக்குறிச்சி: பொதுமக்களின் நலன் காக்கும் திட்டங்களின் இலக்குகளை அலுவலர்கள் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் அனைத்துத் துறைகளின் சார்பில் நடத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலம், தோட்டக்கலை, கால்நடை, வருவாய், சுகாதாரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. துறை சார்ந்த திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். வளர்ச்சி திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களின் நலன் காக்கும் திட்டங்களின் இலக்குகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் துணை ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.
15-Oct-2025