சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்
தியாகதுருகம்: தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஒரு தரப்பினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தியாகதுருகம் அடுத்த கரீம்ஷா தக்கா கிராமத்தைச் சேர்ந்த ஷாகின்ஷா மனைவி ஜக்கியபானு, 32; இவரது தங்கை நாசியாபானு. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பையாசுதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பையாசுதீன் இதற்கு முன்பே திருமணம் ஆனவர். பையாசுதின் முதல் மனைவி ஷபியம், 28; தனது ஆதரவாளருடன் வந்து தன்னையும், உறவினர் சபீதாவையும் தாக்கியதாக ஜக்கியபானு தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷபியம், சப்ரூன், ஷெரின் நுார்நிஷா, ஷர்மிளா, ரபியுன், நஸ்ரின், தவுலத், பக்ருனிஷா, ரஸ்மத், ஷம்ஷாத், மைமுன் ஆகிய 11 பேரும் மீதும் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்கு பதிவு செய்தார். இதனைக் கண்டித்து சப்ரூன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12:00 மணிக்கு கரீம்ஷா தக்கா பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.