சாலை பாதுகாப்பு கலெக்டர் அறிவுரை
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி., ரஜத் சதுர்வேதி முன்னிலை வகித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளுக்கான காரணங்கள் குறித்தும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் போக்குவரத்து ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளில் நிலுவையிலுள்ள கோப்புகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, காவல்துறை உயர் அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.