வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற போலீஸ் அணிக்கு எஸ்.பி., வாழ்த்து
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பிரிவில் வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த காவலர் அணியினர் எஸ்.பி.,யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.இதில் அரசு ஊழியர்கள் பிரிவில் நடந்த வாலிபால் விளையாட்டு போட்டிகளில் 12 அணிகள் பங்கேற்றது. போட்டிகள் ஏ.கே.டி., பள்ளி விளையாட்டு மையதானத்தில் நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அணியினர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்ற போலீஸ் அணியினர் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., ரஜத்சதுர்வேதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உட்பட காவல் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.