சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சிறு தானிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு திட்டம் சார்பில் சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை, கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் சிறுதானியங்களின் நன்மைகள் குறித்த பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுதானியங்களின் பயன்கள், பயன்பாடுகள், சமையல் போட்டி மற்றும் கண்காட்சி நடந்தது. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், துணை பி.டி.ஓ., பழனிவேல் மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், ''மனிதன் நோயற்ற நல்வாழ்வு வாழ சிறுதானியங்களை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உடல் நலனுக்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுதானியங்களை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்,'' என்றார்.