உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  முதல்வர் பங்கேற்கும் விழா மேடை முன்னேற்பாடு பணி: கலெக்டர் ஆய்வு

 முதல்வர் பங்கேற்கும் விழா மேடை முன்னேற்பாடு பணி: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சியில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே விழாவிற்கான மேடை அமைக்கப்பட்டு, பந்தல் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகள் அமரும் இடம், முக்கிய பிரமுகர்கள் வருகை, வாகனம் நிறுத்துமிடம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மேடை அமைத்தல் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். அத்துடன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாலா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதல்வர் வருகையில் மாற்றம்?

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், நடப்பு மாத இறுதிக்குள் கலெக்டர் அலுவலகத்தை திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக மேடை அமைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா வரும் 27ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று அஷ்டமியாகவும், 28ம் தேதி நவமியாகவும் உள்ளது. எனவே திறப்பு விழா 27ம் தேதி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அஷ்டமி தினத்தன்று சுபகாரியங்களை செய்யமாட்டார்கள் என்பதால் திறப்பு விழா தேதி மாற வாய்ப்புள்ளதாகவும், ஒரு நாள் முன்னதாக 26ம் தேதி விழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ