உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளயில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. தமிழக முதல்வர், சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாகத் நேற்று துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், எம்.பி., மலையரசன் துவக்கி வைத்தனர். முகாமில் கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 வட்டாரங்களில் 3 முகாம்கள் வீதம் 27 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடக்க உள்ளது. பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மனநலம், பல், சித்தா மருத்துவம், இயன்முறை, கதிர்இயக்க சிகிச்சை உள்ளிட்ட 17 வகை சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி ., அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் அந்த முகாமிலேயே மேற்கொள்ளப்படும். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உணவு தொழில் புரிபவர்களுக்கான பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, ஒன்றியக்குழுத் சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் மற்றும் டாக்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !