அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தும் அவலம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் பயன்படுத்துவதற்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, கல்வி, வேளாண், சுகாதாரம் மற்றும் வனத்துறை என ஒவ்வொரு அரசு துறைகளிலும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அரசு சார்ந்த பணிகளுக்காக வெளியே செல்லும் அதிகாரிகள் சென்று வருவதற்கு இவைகள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த வாகனங்கள் பெரும்பாலும் 'பொலிரோ ஜீப்'புகள் ஆகும். இதனை ஓட்டுவதற்கு டிரைவர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு அனைத்தும் அரசு நிதியிலிருந்து செலவு செய்யப்படுகிறது. அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்த பின் களப்பணிக்காக வெளியே செல்லும்போதுதான் அரசு வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் வாகனத்தை அலுவலகத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும்.ஆனால் பெரும்பாலான அரசு வாகனங்கள் அரசு பணி அல்லாத, அதிகாரிகளின் சொந்த தேவைக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. வெளியூரில் உள்ள அதிகாரிகளை அவர்களின் வீட்டிற்கு சென்று அலுவலகத்திற்கு அழைத்து வருவது பணி முடிந்த பிறகு வீட்டில் கொண்டு போய் விடுவது.இன்னும் சில அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினரை வெளியே அழைத்துச் செல்வதற்கு கூட அரசு வாகனத்தை பயன்படுத்துகின்றனர். சிலர் தங்களின் குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட்டு அழைத்து வருவதற்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தை அனுப்பி வைக்கின்றனர். இதனால் எரிபொருள் செலவும் பராமரிப்பு செலவும் எக்குத்தப்பாக உயருகிறது. ஒவ்வொரு வாகனத்திற்கும் எவ்வளவு எரிபொருள் செலவிட வேண்டும் என்ற கணக்குகளையும் தாண்டி அதிகளவில் செலவு செய்யப்படுகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு டிரைவர்களும் வேறு வழியின்றி அவர்கள் சொல்லும் சொந்த வேலைகளுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அதிகாரிகளின் சொந்த தேவைக்கு அரசு வாகனங்கள் பயன்படுத்துவதை பார்க்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர். அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்களை விதிகளை மீறி சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்து கட்டுப்பாடுகளை விதித்து அதனைப் பின்பற்ற கலெக்டர் உத்தரவிட வேண்டும் -நமது நிருபர்-.